loader
நிரப்புகிறது.....
Slider Image
8/8/2019 1:15:26 PM

தமிழர்களின் அறம் ‡ 19

 

      சங்க மன்னர்கள் வீரம், அறம், கொடை, புகழ் ஆகியவற்றில் சிறந்து விளங்கினர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதில் சோழ மன்னர்களில் ஒருவரான சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் பற்றி தாமப்பல் கண்ணனார் எனும் புலவர் பாடிய புறப்பாடல் அவர்களின் வீரத்துடன் செம்மையான குணத்தையும் பறைச் சாற்றுவதாக அமைந்துள்ளது.
    மக்களின் துன்பம் நீங்க தவம் செய்யும் அவிர்சடை முனிவர்கள் மருளும்படியும் புள்ளினங்கள் வாழும் படியும் சிபி மன்னன் ஆட்சிப் புரிந்தான். பருந்தின் பிடியிலிருந்து புறாவைக் காப்பாற்றுவதற்காக தனது தொடையிலிருந்து சதையை அரிந்து கொடுத்த அத்தகைய சிபியின் வழி வந்தவன் சோழ மன்னன்! அத்தகைய மரபில் வந்த நீ, நான் செய்த பிழையை தான் செய்ததாக நினைந்து வருந்தினாய்! நாணினாய்! தம்மை பிழை செய்தோரைப் பொறுத்துக் கொள்ளும் செம்மாப்பு இந்த சோழர் குடிக்கு எளிது என்பதை புகழ்ந்துரைத்து  அத்தகைய  புகழை  உடைய  நீ காவிரியாறு குவித்துள்ள மேட்டு மணலின்  எண்ணிக்கையைக்   காட்டிலும்  பல்லாண்டு வாழ்கவே! என வாழ்த்துரைக்கிறார்  அப் புலவர்!


 நின்யான்  பிழைத்தது  நோவாய்  என்னினும்,
 நீ  பிழைத்தாய்  போல்  நனி  நாணினையே,
 தம்மைப்  பிழைத்தோர்ப்  பொறுக்குஞ்  செம்மல்!
       (புறம் ‡ 43)
 

Slider Image
7/4/2019 12:36:59 PM

தமிழர்களின் அறம் -18

சங்கப் புலவர்கள் அக்கால மன்னர்களின் வீரம், வலிமை, கொடை, புகழ் என ப லவற்றை பாடிய போதும் அவர்களின் வீரமும் வலிமையும் தேவையில்லாமல் மற்ற நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் தொல்லை தரும் விதமாக அமைதல் கூடாது என அவ்வப்பொழுது இடித்துரைத்தனர்! அதனை இடைக்காடனார் எனும் புலவர் சோழன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளி வளவன் மேல் பாடிய பாடல் மூலம் அறியலாம். மலை போன்ற யானை; கடல் போன்ற படை; மின்னும் வேலைப் பார்த்து பகை அரசர்கள் நடுங்கும் நிலை! இது தவறன்று! நீ உனது நாட்டில் ஆற்று நீரின் மோதல் அன்றி வேறு மோதல் இல்லாமல் ஆட்சி செய்க! புலி தன் குட்டியைப் பாதுகாப்பது போன்று செங்கோல் ஆட்சி புரிய இத்தகைய நன்செய் நாட்டு மன்னனே, புன்செய் நாட்டின் மீது (பாண்டிய நாடு) படை எடுக்காதே! ஆமை, தேன், குவளை மலர்களை பரிசாக அளிப்பவர்கள் உன் நாட்டு மக்கள்! மலையில் இருந்து இறங்கும் ஆற்றலைப் போல புலவர்களுக்கும் வாரி வழங்குபவன் நீ! ஆனால் நீ கூற்றுவன் போல மாற்று அரசர்களின் மண்ணைப் பார்த்து கொண்டிக்கிறாயே! என இடித்துரைக்கின்றார்! மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி நிலவரை இழிதரும் பல்யாறு போலப் புலவரெல்லாம் நின் நோக்கினரே நீயே ருந்தில் கனிச்சி வருந்த வட்டித்துக் கூற்றுவெகுண் டன்ன முன்பொடு மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே! (புறம்-42)

Slider Image
5/18/2019 11:12:20 AM

தமிழர்களின் அறம்-17

 அறத்தையும் மறத்தையும்  போற்றிய தமிழக சங்கக் கால மன்னர்கள் தங்களது நாட்டை பகை நாட்டவரும் விரும்பும்  வண்ணம் ஆட்சி செய்தனர். வீரம் விளைந்த மண்ணில் ஈரத்தையும் காத்தவர்கள் சங்க மன்னர்கள். இதனை ஆவூர் மூலங்கிழார் எனும் புலவர் சோழன் குளமுற்றத்துக் அஞ்சிய கிள்ளிவளவன் எனும் சோழ மன்னன்  மேல்  பாடிய  பாடல்  மூலம் அறியலாம்.

குன்றுகளைப் போன்ற இளங்களிறுகளை படைத் திரளாகக் கொண்டவன். சினங் கொண்டு பார்க்கும் இடத்தில் நெருப்பை  உருவாக்குபவன்! அருள் கொண்டு பார்க்கும் இடத்தில் பொன்னை விளைவிப்பவன்! நிலவிலே வெயிலையும்  தண்மையையும் உருவாக்க வல்லவன் நீ! செல்வர்கள் வறியவர்களுக்கும் வாரி வழங்குதல் உனது நாட்டில் நிகழும்! பகைவர் நாட்டு பரிசிலரும் உனது நாட்டில் கிடைக்கும் இன்பம் விண்ணுலகிலும் கிடைக்காது, என உனது   நாட்டைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பர்.
உடையோர்  ஈதலும்,  இல்லோர் இரத்தலும் 
            கடவத்  தன்மையின் கையறவு  உடைத்த, என 
            ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்
            நின் நாடு உள்ளுவர், பரிசிலர்;
(புறம்-38)
இந்தப் பாடல் மூலம் வலிமைப் பொருந்திய சங்கக் கால தமிழ் மன்னர்கள் தமது நாட்டை வறியவர்களுக்கும், பகை நாட்டவருக்கும் கூட இன்ப மயமான  சூழலை  கொண்ட ஒரு   இடமாக  வைத்திருந்தனர்  என்பது  துலங்கும்.

Slider Image
4/15/2019 7:17:15 PM

தமிழர்களின் அறம்-16

 வீரத்தில் கொடையிலும் வல்லவர்களாகவும்  நல்லவர்களாகவும் விளங்கிய சங்க மன்னர்கள்  போரின் போது மகளிரையும் பசுக்களையும் நோய்வாய்ப் பட்டவர்களையும், பிராமணர்களையும் தாக்குவதில்லை என்ற நியதியைக்  கடைப்பிடித்து வந்தனர். அது மட்டுமின்றி  போருக்கு புறங்காட்டியவர்களையும் போருக்கு அஞ்சியவர்களையும் கூட தாக்குவது ஓரு இழுக்காக கருதப்பட்டது. இதனை ஆலத்தூர் கிழார், சோழன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளி  வளவன் மேல் பாடிய பாடல் மூலம்  அறியலாம்.சோழன் கருவூரைச் சுற்றி முற்றுகையிட்ட  போதும் சேர மன்னன் போர் முரசு கேட்ட  பின்னரும் போர் செய்ய கோட்டையை விட்டு வெளியே வரவில்லை.சோழ வீரர்கள் கருவூருக்கு காவலாக இருக்கும் மரங்களை   கூரான  கோடரிக் கொண்டு  வெட்டுகின்றனர். அதனால்  பூ நாறும்  அம்மரங்களின் நெடியக் கொம்புகள் நிலை கலங்கி வீழ்கின்றன. இவ்வாறு வெட்டும் ஒலி நெடுமதில்   சூழ்ந்த  அரண்மனைக்குள் இருக்கும் சேரனின் காதில் கேட்டும்  அவன் போருக்கும்  வராமல்  இனிதாக வீற்றிருக்கானே, அத்தகையவனுடன் போர் செய்ய வேண்டுமா, செய்ய வேண்டாமா என்பதை ஆராய்ந்து முடிவு செய்க  என்கிறார் ஆலத்தூர் கிழார். 

கடி மரம்  தடியும்  ஓசை  தன் ஊர்
நெடுமதில்  வரைப்பின்  கடிமனை  இயம்ப
ஆங்கு இனி  திருந்த  வேந்னோடு  ஈங்கு நின்
சிலைத்தார்  முரசம் கறங்க
மலைத் தனை  என்பது நானுத்தகவு உடைத்தே

Slider Image
1/22/2019 3:39:37 PM

தமிழகர்களின் அறம் -14

 வீரத்திலும்  கொடையிலும்  சிறந்து  விளங்கிய  சங்க  கால  மன்னர்களின்    கொடைச் சிறப்பை  சங்கப் புலவர்கள் தங்களது பாடல்கள் மூலம் உலகிற்கு பறைச் சாற்றினர். கொடை என்பது சங்க மன்னர்களைப் பொறுத்தவரையில் இரந்தவர்க்கு எதிர்பார்ப்பைக்  காட்டிலும்  அதிகமாக  வாரி  வழங்குவதேயாகும்.

பசுவின் முலையை அறுத்தலும், கர்ப்பிணி பெண்ணின் கருவைச் சிதைத்தல், பார்ப்பனை அடித்தல் போன்றவை பாவச் செயல்கள் ஆகும். ஆனால் இந்தப் பாவங்களை கழுவாய்  செய்து   போக்கிக்  கொள்ளலாம். ஆனால் செய் நன்றி மறத்தல் என்பது மிகப்பெரிய  பாவம். அந்தப்  பாவத்திலிருந்து  தப்புவது  என்பது  இயலாத  காரியமாகும்.
 
இதனை  ஆலத்தூர் கிழார் சோழன் குளமுற்றத்துத்  துஞ்சிய   கிள்ளி  வளவன்   மேல் பாடிய   பாடல்  மூலம்  அறிந்து  கொள்ளலாம்.
பாணர்களுக்கு அவர்கள் தமது குடும்பத்தோடு இரத்தி மர நிழலில் அமர்ந்து உண்ணுவதற்கு ஏற்றவாறு தனது செல்வத்தை மறைத்து வைத்துக் கொள்ளாமல் பாணர்களுக்கு வெண்சோறு வழங்கியவன் நீ என்று மன்னனின் கொடைத் தனத்தை புகழ்ந்து பாடுகிறார் ஆலத்தூர் கிழார். அத்தகைய மன்னன் மழைத் துளிகளின் எண்ணிக்கையை  விட  அதிக  ஆண்டுகள்  வாழ  வேண்டும்  எனவும்  விழைகிறார் புலவர்.
 
ஆன்மலை  அறுத்த அறினி லோர்க்கும்
           மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
           குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும் 
           வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என,
           நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன் 
           செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
           அறம் பாடின்றே ஆயிழை கணவ!
 

Slider Image
1/4/2019 4:36:51 PM

தமிழர்களின் அறம்-13

 சங்க கால மன்னர்கள் வீரத்திற்கு இணையாக கொடையிலும் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். இதனை கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளி மேல் பாடிய பாடல் மூலம் அறிந்து கொள்ளலாம். கொடையும் ஏனோ தானோ என்று இருப்பதில்லை. இரவலரின் மனம் நிரம்பும்படியான கொடையைத் தானமாக வழங்குவதில் வல்லவராக திகழ்ந்தவர் சங்க  மன்னர்கள்.

கடும்பின்  அடுகலம்  நிறையாக  நெடுங்கொடிப்
பூவா  வஞ்சியும்  தருகுவன்,பணைத்தோள்,
ஒண்ணுதல், விறலியர், பூவியை பெறுக!
           என மாட மதுரையும் தருகுவன்; எல்லாம் 
 
                                                           (புறம் : 32)
 
நலங்கிள்ளி   சோழன் பகைவரை அழிக்கும் திறல் மிக்கவன். எனினும் இரவலர்பால் பேரருள் பாராட்டுபவன். அவனிடம்  சென்று  உணவில்லையயன அடுகலம் நீட்டினால்  அதில் சோற்றிற்கு பதிலாக அவனது தலைநகரான வஞ்சி நகரத்தையே தருவான். விறலியர்கள் அவனை மகிழ்வித்துப் பூவிலை தகுதி என வேண்டினால் மாட மதுரையையே  பரிசிலாகத்  தருவான்.
 
இதிலிருந்து, சங்க மன்னர்களின்  கொடைத்  தன்மை  எவ்வாறு  இருந்தது   என்பதை  அறிந்து  பெருமை  கொள்ளலாம்.

Slider Image
12/27/2018 11:28:14 AM

தமிழர்களின் அறம் -12

 புற நானூற்றுப் பாடல்கள் பல, மன்னர்களின் வீரத்தையும் புகழையும் பறைச் சாற்றுவதில் இணையற்றவை. அதே நேரத்தில் மன்னர்கள் போர் முடிந்தவுடன் செய்ய வேண்டிய  கடமைகளை  எடுத்துரைக்கவும்  அப்பாடல்கள்  தயங்கியதில்லை.

உறையூர்   முதுகண்ணன் சாத்தனார், சோழன் நலங்கிள்ளியைப் பற்றி பாடிய பாடல்  மூலம்  இது  வெளிப்படுகிறது.
 
பாணர்கள் உன்னை  விட்டு போனபின் தேவியர்களை தழுவி மகிழும்     வேந்தனே! கொடியவர்களை கொன்று நல்லவர்களை காப்பதில் வல்லவனே! நீ ஒரு போதும் சோம்பலுடன் இருக்காதே! இளநீரை உதிர்க்கும் தென்னை மரங்கள் கொண்ட வடநாட்டை உடையவனே! போர் முடிந்தபின் உன்னை நாடிவரும் வறியவர்க்கு வாரி வழங்குவாயாக!  தேடி வருபவர்களுக்கு  பொருள் வழங்கி அந்தப் பொருட்களுக்கு பெருமைச் சேர்ப்பாயாக! அதாவது, போர் முடிந்தவுடன், நல்வாழ்வில் ஈடுபட வேண்டும் வேந்தன்  என்பதை எடுத்துரைக்கிறார் புலவர்.
            இளநீர் உதிர்க்கும் வளமிகு நான்னாடு
பெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள்
பற்றா மாக்களின் பரிவு முந்து உறுத்துக்
கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்
சிறுமனை வாழ்க்கையின் ஓரீஇ, வருநர்க்கு
உதவி ஆற்றும் நண்பின், பண்புடை
ஊழிற்று, ஆக, நின் செய்கை! ஆம்
          
(புறம் – 29)
 

Slider Image
12/5/2018 2:37:40 PM

தமிழர்களின் அறம் - 11

 சங்க இலக்கியத்தின் அகமும் புறமும் தமிழ்ச் சமுதாயத்தின் இரண்டு கண்கள் போன்றவை. கணவன்-மனைவி அன்பை அடிப்படையாகக் கொண்ட அகத்திற்கு ஈடாக மன்னர்களின், மக்களின் போர்முறை, புகழ், வீரம், கொடை, ஈகை போன்ற வாழ்வியல் நெறி முறைகளைப் பற்றி புறநானூறுப் பேசுகிறது. மன்னர்கள் வல்லவர்களாக இருந்தால் மட்டுமே போதாது. நல்லவர்களாகவும், அருள் உள்ளம் படைத்தவர்களாகவும் இருத்தல் வேண்டும்  என்பதை  சங்கப் புலவர்கள்  எடுத்துரைக்கின்றனர்.

உறையூர்  முதுண்ணன்  சாத்தனார், சோழன் நலங்கிள்ளி மேல் பாடிய பாடல் மூலம்  இதனை  அறியலாம். மன்னர்கள் கொடை வள்ளல்களாக திகழ வேண்டும் என்பதை நேரடியாகவும் மறைமுகமாகவும் எடுத்துக் கூறுவதில் சங்க கால புலவர்கள் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள்.
சேற்றில் மலரும் நூற்றுக்கணக்கான செந்தாமரை மலர்கள் எந்தவித வேற்றுமையும்  இல்லாமல்  திகழ்கின்றன. அதுபோல, வேற்றுமை   இல்லாத  உயர் குடியில்  பிறந்தவர்கள்  பலராக  இருப்பினும்  அதில்  ஒரு  சிலரே புகழ் பெற்று வாழ்கின்றனர். பலர், தாமரை  இலைகளைப்  போல  புகழின்றியே  வாழ்கின்றனர்.
           செயற்கரியச்  செயல்களை  செய்பவர்கள்  வானூர்தி  செல்லும்  உயர  அளவிற்கு  புகழ் வாய்ந்தவர்கள். அத்தகைய  சிறப்புடைய  நலங்கிள்ளியே! பசியால் வருந்தி வருபவர்களுக்கு  அருள்  புரிவாயாக  என்று   அறிவுரைக்  கூறுகிறார்.
 
இதனை,
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகுமதி. (புறம் – 27)
என்ற அடிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Slider Image
11/28/2018 4:34:07 PM

தமிழர்களின் அறம் -10

 சங்க மன்னர்கள் வீரம், கொடையில் வல்வலர்களாகத் திகழ்ந்தவர்கள். போரின் போது  தங்களுக்கென  சில  வரை முறைகளை, நீதி நெறி முறைகளைப் பின்பற்றினர். போர் நடக்கும் சமயத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயுற்றவர்கள் என சமூகத்தின் விளிம்பில் வாழ்பவர்களுக்கு தொந்தரவு ஏதும் செய்யாமல் தங்களை ஒரு எல்லைக்குள் நிறுத்திக் கொண்டவர்கள். இருப்பினும், போரில் எதிரிகள், அவர்களது மன்னர்கள், படைத்தலைவர்கள் கொல்லப்படுவது இயல்பே! அத்தகைய இக்கட்டான சமயங்களில் புலவர்கள் வெற்றி பெறும் மன்னர்களிடம், தோற்றுப் போகும் மன்னர்களுக்காக தூது சென்று உயிர் காக்க வேண்டுவதும் நடப்பதுண்டு. எதிரிகளின் மேல்  இரக்கம்  காட்ட  வேண்டும்  என்றும்  சங்கப் புலவர்கள்  இரந்ததுண்டு.

இதனை, தலையாலங்கானத்துச்  செரு வென்ற  நெடுஞ்செழியன் மேல் கல்லாடனார்  எனும்  புலவர்  பாடிய  பாடல்  மூலம்  அறியலாம்.
 
கல்லாடனார், நெடுஞ்செழியனைப் பார்த்து வேண்டுகோள் விடுகிறார். தலையாலங்கானத்துப் போர்க்களத்தின் திங்களும், ஞாயிறும் மறைவது போன்று சோழ, சேர மன்னர்களின் அரசுகளை கைப்பற்றும் போது, அம்மன்னர்களின் மனைவி மார்கள் கைமை  கோலம் அடையாதவாரும், கூந்தல் களையா வண்ணமும் பார்த்துக் கொள்க! என்று கூறுகிறார். அதாவது, சோழ, சேர மன்னர்களை கொல்ல வேண்டாம். அவர்களை உயிரோடு  விட்டுவிடு  என்று மறைமுகமாக கூறுகிறார்.
 
செழிய!
முலைபொலி அகம் உருப்ப கூறி,
மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,
அவிர்அறல் கடுக்கும் அம்மென்
குவை யிரும் கூந்தல் கொய்தல் கண்டே!
(புறம் -25)

Slider Image
11/17/2018 3:48:07 PM

தமிழர்களின் அறம் -9

 புறநானூறு  சங்க கால மன்னர்களின், மக்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டும்  செவ்வியலக்கியம். மன்னர்களின் பண்புகள் என்னென்ன என்பதை படம் பிடித்துக் காட்டுவதுடன் நில்லாமல் அந்த பண்பு நலன் தவறும் பொழுது மன்னர்கள் எவ்வாறு இருத்தல் வேண்டும் என சங்கப் புலவர்கள் இடித்துரைத்தனர். மக்களின் சமூக வாழ்க்கையையும் பரதிபலிக்கும் வகையில் சங்ககால புறநானூறு விளங்குகிறது. மன்னனின்  மாண்புகளோடு  மக்களின்  மாண்புகளையும்  பேசும்  பேரிலக்கியம்  இது!

மன்னரின் பணி, போர் தொழில் மட்டுமன்று. கொடைத் தொழிலும் மக்களின் வாழ்வாதாரமான வேளாண்மையும் இன்றியமையாதன என்று சங்கப் புலவர்கள் எடுத்துரைக்கின்றனர்.
 
சேரமான் சேரல் இரும்பொறைப் பற்றி  குறுங்கோழியூர்  கிழார் பாடிய பாடல் இதனை வலியுறுத்துவது போல் உள்ளது. அவனது  நாட்டில்  அமைதி  நிலவுகிறது  என்பதை அசைந்த கையும், நிமிர்ந்த நடையும், ஒலிக்கும் மணியும், உயர்ந்த கோடும், பிறைவடி மத்தகமும், சினந்த நோக்கும், பரந்த அடியும், தேனீ மொய்க்கும் மதநீரும் உடைய இளங்களிறு இடுப்பில் வாளிலில்லாதவருக்கு எந்த இடையூறும் விளைவிக்காமல் கம்பத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதன் மூலம் உணர்த்துகிறார். 
 
              பாசறைகள் எந்த காவலும் இன்றி அமைந்துள்ளன. பகைவரின் திறை மூலம் சுற்றத்தாரை வாழ வைப்பவன்! நின்னைப் பாடியவருக்கு அள்ளி அள்ளி தருபவன் இத்தகைய  வீரமும், ஈகையும்  கொண்ட  நீ  அத்துடன் நின்றுவிடாதே! 
            
            பெரும் முனிவிலை
வேறுபுலத்து இறுக்கும் தானையயாடு
சோறுபட நடத்தி, நீ துஞ்சா மாறே! (புறம் :22)
 
              சோறு பெருகுவதற்கான முயற்சிகளையும் நீ மேற்கொள்க! இதன் மூலம் வீரம், கொடை  இவற்றைவிட மக்களுக்கு உணவளிக்கும் வேளாண் தொழிலில் ஈடுபட வேண்டும்  என்று  குறுங்கோழியூர்  கிழார்  வலியுறுத்துகிறார்.

Slider Image
11/8/2018 2:22:01 PM

தமிழர்களின் அறம்-8

 சங்க காலத் தமிழ் மன்னர்கள் போரில் மட்டும் வல்லவர்களாகத் திகழவில்லை! அமைதியை நிலைநாட்டி பகைவர்களின் படையயடுப்பிலிருந்தும் மக்களை தன் உயிர் போல் பாதுகாத்து வந்தனர். தன்னுடைய வலிமையைக் கொண்டு எதிரிகள் நாட்டின் மீது படையயடுத்து துன்பம் ஏற்படாமல் அனைவரையும் கண் இமை போல பாதுகாத்து அறம் காத்தனர். தனது வீரத்தை தேவையில்லாமல் பயன்படுத்தியதாக எங்கும் காணக் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் நாட்டில் நுழைந்த பகைவர்களை துரத்தியடிக்க துளிப்பொழுதும்  யோசித்தது  இல்லை.

 

இதனை சேரமன்னன் சேரல் இரும்பொறை மேல் குறுங்கோழியூர் கிழார் எனும் புலவர் பாடிய பாடல் மூலம் அறிக முடிகிறது.
             சோறுபடுக்கும் தீயோடு
செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது
பிறிதுதெறல் அறியார் நின்நிழல் வாழ்வோரே;
திருவில் அல்லது கொலைவில் அறியார்;
(புறநானூறு-20)
 
ஆழமான கடலையும், பரந்த நிலத்தையும், விரிந்த  வானத்தையும் தன்கீழ் கொண்ட இம்மன்னின் ஆட்சியில் சோறாக்கும் நெருப்பின் சூட்டையும், சூரியனின் வெப்பத்தையும் தவிர வேறு எந்த போர் வெப்பத்தையும் அறியாமல் வாழ்ந்து வந்தனர். பகைவர் மண்ணை மன்னன் கைப்பற்றினாலும் இவனது மண்ணை எந்த பகைவனும் வெற்றிக் கொள்ள முடியவில்லை. கர்ப்பமான பெண்கள் மட்டுமே இவனது மண்ணை உண்டு வந்தனர். நாட்டு மக்கள் இந்திரனது வில்லை மட்டுமே அறிந்து வைத்திருந்தனர். கொலைத் தொழில் புரியும் வில்லைப்பற்றி எதுவும் அறியாது இருந்தனர். அறத்தையே செங்கோலாகக்  கொண்டு  ஆட்சி  அமைத்தனர்  அக்கால  தமிழ்  மன்னர்கள்! 

Slider Image
10/22/2018 12:55:01 PM

தமிழர்களின் அறம்-7

 பண்டையத் தமிழ் மன்னர்கள் அறத்திலும், வீரத்திலும், கொடையிலும் மக்களைப் பேணுவதிலும் தலைச் சிறந்து விளங்கினர். இவற்றைப் போற்றி புகழ்ந்த புலவர்கள் வீரத்தோடு வேளாண்மையைப் போற்ற வேண்டும் என  பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்  குட புலவியனார்  என்ற  புலவர்  பாடுகிறார்.

நீர்  இன்று  அமையா  யாக்கைக்கு எல்லாம்
உண்டி  கொடுத்தோர்  உயிர்கொடுத்  தோரே ;
உண்டி  முதற்றே  உணவின்  பிண்டம் ;
உணவெனப் படுவது  நிலத்தோடு  நீரே;
நீரும்  நிலமும்  புணரியோர், ஈண்டு
உடம்பும்  உயிரும்  படைத்திசி னோரே ;
(புறநானூறு-18)
பாண்டிய நெடுஞ்செழியன் உலகம் முழுவதையும் வெல்ல நினைத்தாலும் நிலை பெற்ற புகழை வேண்டினாலும் அவன் செய்ய வேண்டியது என்னவன்றால், நீர் இன்றி அமையாது உடல், உணவை அந்த உடலுக்கு கொடுத்தவரே உயிர் கொடுத்தவர், உடல் என்பது உணவால் ஆனது. உணவு  என்பது  நிலத்திலிருந்து  விளையும்  பொருளும்  நீரும் ஆகும். எனவே, நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்து வேளாண்மைக்கு உதவி செய்! அவ்வாறு உதவி செய்பவர்களே உயிரையும் உடலையும் படைத்தவராவர்! இவ்வாறு வேளாண்மையின் புகழ் பற்றி எப்பொழுதும் போரிட்டுக் கொண்டிருக்கும் பாண்டிய நெடுஞ்செழியனுக்கு  புலவர்  அறிவுரைக்  கூறுகிறார்.

Slider Image
10/8/2018 3:12:07 PM

தமிழர்களின் அறம் - 6

 போர் நெறி முறை

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்ட புற நானூற்றுப் பாடல்கள் அக்கால வாழ்வியல் முறைகளை எடுத்துக் கூறுவதுடன் மட்டுமின்றி அரசர்களின் வீரம், கொடை, பண்பு நலன்களையும், அக்கால சமூகத்தின் கட்டமைப்பு சமூகத்தின் நல்ல மற்றும் கெட்ட மாண்புகளையும்  எடுத்துரைப்பதில்  கண்ணாடியாக  விளங்குகிறது.

போர் என்பது மனிதன் தோன்றிய காலத்தே ஏற்பட்டுவிட்ட ஒன்று. முற்காலத்தில் ஆநிரைகளையும், நிலத்தையும் கைப்பற்ற ஏற்பட்ட போர் தற்காலத்தில் பொருளாதார காரணங்களுக்காகவும், இனங்களை  அழிப்பதற்காகவும்  நடைப்பெற்று  வருகின்றன.

அக்காலப்  போரின்போது  சில மாண்புகள் மற்றும் வரைமுறைகள் பின்பற்றப் பட்டன என்பதற்கு  புறநானூறு  சாட்சியம்  சொல்கிறது.

இதற்குச் சான்றாக, நெட்டிமையார் எனும் புலவர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி மேல் பாடிய பாடல் எனலாம்.

ஆவும் ஆனியற் பார்ப்பன மக்களும்

பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்

(புறநானூறு-9)

போர் என்பது வன்மையுடையோர் பிற வன்மையுடையோரிடும் மோதுவதே! எளியவர்களை, வறியவர்களை மோதலுக்கு அழைப்பது அறமாகாது ! அதனை மேற்கண்ட வரிகளில் காணலாம்.

போருக்கு முன்பு பசுக்களையும், பசு போன்ற பார்ப்பனர்களையும், பெண்களையும், நோய்  வாய் பட்டவர்களையும்  மன்னன்  எச்சரிக்கை விடுப்பதாக இந்தப் பாடல் கூறுகிறது. 

இத்தகைய நல்ல மனது உடையவனாக அரசன் இருப்பதால், அற நெறியில் நடப்பவனாக மன்னன் விளங்குவதால் அவன் பல்லாண்டுகள் வாழ வேண்டும் என நெட்டிமையார்  வாழ்த்துகிறார். அதுவும் எத்துணை ஆண்டுகள் தெரியுமா? பஃறுளி ஆற்றின் மணல் எண்ணிக்கையைக்  காட்டிலும்  பல  ஆண்டுகள்,  என  வாழ்த்துகிறான்.

 

இதிலிருந்து, தமிழ் மன்னர்கள் கெட்டப் போரிடும் சமயத்திலும் நீதி நெறி முறைகளைக்  கடைப்பிடித்தது  விளங்கும்.

 

Slider Image
10/3/2018 4:15:52 PM

தமிழர்களின் அறம்-5

 தமிழர்களின் கொடை, ஒழுக்கம், அறம், வீரம், வன்மை, திண்மை போன்ற பெரும் பண்புகளைப் போற்றி பேசும் பெரும் இலக்கியம் புறநானூறு. அத்தகைய இலக்கியத்தின் ஒரு கனியாக விளங்குகிறது  புலவர் நரிவெரூஉத் தலையார் பாடியச் செய்யுள். இந்தப் பாடல் சேர மன்னன் சேரமான் கருவூரேறிய  ஏள்வாட்  கோப்பெருஞ் சேரல்  என்பவனின்  மேல்  பாடப்பட்டதாகும்.

அவனைப் பார்த்து,
எருமை அன்ன கருங்கல் இடை தோறு,
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்,
கானக நாடனை
என்று வாழ்த்துகிறான். எருமை போன்ற வலிவான, கருப்பான, பெரிய கருங்கற்களை கொண்ட பசுக் கூட்டம் போன்ற யானைக் கூட்டத்தைக் கொண்ட காட்டை சொந்தமாகக் கொண்டவனே! நீ ஒரு பெருமகன், நீ விரும்பினால் நான் ஒன்று  கூற  விரும்புகிறேன்  என்கிறான் புலவன்.
 
அருளையும் அன்பையும் ஒதுக்கிவிட்டு நரகத்தில் வாழும் மக்களைவிட்டு நீ தூரமாக இரு. அவர்கள் துயரத்தில் உழல்பவர்கள் இன்பம் அறியாதவர்கள். அத்தகையவருடன்  சேராதிரு  என்கிறான், சேரனைப் பார்த்து.
 
கிடைத்த அரிதானப் பதவியைக் கொண்டு உனது நாட்டை, குழந்தையைப் பார்த்துக் கொள்வது போல் பேணிப் பாதுகாக்க வேண்டும். அருளும் அன்பும் கொண்டு குழந்தையை பாதுகாப்பது போல் எனது நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என சங்கப் புலவன் வலியுறுத்துகின்றான். அருளும், அன்பும் மன்னனுக்கு  இரு  கண்கள்  போன்றது!
 

Slider Image
9/26/2018 2:01:55 PM

தமிழர்களின் அறம் - 4

 புறநானூறு தமிழ் வேந்தர்களின் அறத்தையும், மறத்தையும், கொடைத் தன்மையையும், உலகினை காக்க வேண்டி முறைப் பற்றியும்  எடுத்துரைக்கும் நன்னூலாகும்.

 

            மூவேந்தர்களின்  ஐந்து வகைப் பண்பு  நலன்களாகிய ஓதல், வேட்டல், ஈதல் படை வழங்குதல், குடியோம்புதல்  ஆகியவற்றை பறைச் சாற்றும் பழங்காப்பியம் புறநானூறு. 
            முடிஞ்சியூர் முடிநாகராயர் எனும் புலவன் சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் மேல் பாடிய பாடல் மூலம் சங்க கால மன்னர்களின் அறம், தீரம், வீரம், கொடைப் பண்பு நன்கு புலப்படுகிறது. நிலம் போன்ற பொறுமையும், வான் போன்ற பரந்தத் தன்மையும், காற்றைப் போன்ற வலிமையும், தீயைப் போன்ற எரிக்கும் ஆற்றலும், நீரை  போன்ற  கொடைத் தன்மையும்   உடையவர்கள்   அக்காலத் தமிழ் மன்னர்கள். 
 
            சங்ககால மன்னர்கள் பால் புளித்தாலும், கதிரவன் மறைந்தாலும், நான் மறை வேதங்கள் திரிந்தாலும், குற்றமில்லாச் சுற்றத்தாருடன் வாழ்பவர்கள். அத்தகைய மன்னனை பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்று நீண்டு வாழ்க! என புலவர் முரஞ்சியூரார்   வாழ்த்துரைக்கின்றார். 

Slider Image
9/14/2018 5:10:49 PM

தமிழர்களின் அறம் - 3

              சங்க கால மன்னர்கள் அறமும், மறமும் கொண்டவர்கள். இல்லையயன்று கூறாத இரக்க குணம் நிறைந்தவர்கள். எதிரிகளை புறமுதுகுக் காட்டி ஓடச்செய்த போதிலும் இல்லையயயன்று வருபவர்களை இன் முகம் காட்டி பரிசுப்பொருட்களை வழங்கும் வள்ளல்கள். அவர்கள், மக்களுக்கு நெல்லையும் நீரையும் உயிராகக் கருதாமல் தன் மன்னனை உயிராகக் கருதியவர்கள். 

           அத்தகைய  மன்னர்களின்  வழி வந்தவன் பாண்டியன் கருங்கை ஒர்வாள் பெரும் பெயர் வழுதி என்பவர். அவனது வீரத்தையும் தீரத்தையும்  பண்புகளையும் அழகாகப் பாடியுள்ளார் இரும்பிடர்த் தலையார். முழு நிலவு போன்ற  வெண்கொற்றக் குடையின் மூலம் மண்ணில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் குளிர்ச்சி தந்தவனே! இல்லையயன்று கூறாத நெஞ்சம் உடையவனே! பொற்கவசம் அணிந்த யானை மேல் அமர்ந்து போர் புரிபவனே! வீரக் கழலை அணிந்தவனே! ஈரச் சந்தனம் அணிந்த மார்புடையவனே! உன்னை நாடிவரும் இரவலருக்கு  வறுமை  நீங்கும்  அளவுக்கு அள்ளித்  தருவதுதான் உன்னுடைய வலிமை என்று அரசனது உண்மையான வலிமை என்ன என்று அழகாக எடுத்துரைக்கிறார்  இரும்பிடர்த் தலையார்!
         நிலம்  பெயர்ந்தாலும்  சொற்  பெயராத  மன்னனைப்  பார்த்து ஊர் இல்லாத, நீர் இல்லாத, நீளமான வழியை கடந்து வரும் வாழத் தெரியாத இரவலுருக்கு அவர்களது நிலையை எண்ணிப் பார்த்து வாரி வழங்குக!  என்று புலவர் அறம் பாடுகிறார். அதனையும்  இரவலரது  முகம் அறிந்து வழங்க வேண்டுமாம். 
 
அதனால் தான் மனத்தில் உள்ளதை குறிப்பதால்  உணர  வல்லவனை  தெய்வத்தோடு  ஒப்பிட்டான்  திருவள்ளுவன்.
 

Slider Image
9/5/2018 5:04:15 PM

தமிழரின் அறம் - 2

 மன்னர்களை தன்னுரையால் நயம்பட இடித்துரைப்பதில் வல்லவர்கள் தமிழ் புலவர்கள். தான் வறுமையில் வாடினாலும் செம்மையாக வாழ்ந்தாலும் கூற வேண்டியதை தக்க நேரத்தில் கூறாமல் விடுவதில்லை. அத்தகைய  உறவை  தமிழ் மன்னர்களும்  புலவர்களும் பேணிக் காத்தனர். இடித்துரைக்கும் புலவர்களை  கடிந்து கொண்ட  மன்னர்களை  காண்பதரிது.  அதனால்தான்  தமிழ் மன்னர்களால் செங்கோல்  ஆட்சி  புரிய  முடிந்தது.

மக்களும்  தம் மன்னனை தன் உயிராக  பாவித்து வந்தனர். இதனை புறநானூற்றுப் புலவன்  மோசிகீரனாரின்  இந்தப் பாடல்  மூலம்  நன்கு  அறிய  முடியும்!
 
நெல்லும்  உயிர்  அன்றே: நீரும்  உயிர்  அன்றே;
மன்னர்  உயிர்த்தே  மலர்தலை  உலகம்;
அதனால், யான் உயிர் என்பது  அறிகை
 வேன்மிகு  தானை  வேந்தற்குக்  கடனே.
 
மக்கள் வாழ்வதற்கு உணவும் ( நெல்லும் ) நீரும் அவசியம். அவற்றை உண்டுதான் அவர்கள் உயிர் வாழ்கின்றனர். ஆனால், அவை மக்களின் உயிர் கிடையாது. மன்னனின்  உயிரே அவர்கள் உயிர். எனவே மன்னன், மக்கள் உயிரை தன்னுயிராகக் கருதி அவர்களின் துன்பம் போக்கவேண்டும். அத்தகை இன்னலைத் துடைப்பதே வேந்தர்களின் கடமை. இதிலிருந்து, சங்க காலத்தில் மன்னனுக்கும் மக்களுக்கும்  இருந்த   நல்லுறவு புலப்படும்.
அதனால் தான் தெய்வப் புலவர் திருவள்ளுவரும் உலக உயிர்கள் அனைத்தும் மழையை நம்பி வாழ்வது போல, குடிமக்கள் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்  என்று பறைச் சாற்றினார்!
 

Slider Image
8/30/2018 2:38:40 PM

தமிழர்களின் அறம் - 1

 தமிழ் மொழியின் சிறப்பு அனைவரும் அறிந்தே.உலகின் மூத்தக் குடியும் முதல் குடியும் தமிழ்க் குடியே. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மொழி நம் மொழி.தமிழ் மொழியின் பொற்காலம் என்றால் அது சங்ககாலம். பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் சங்க இலக்கியத்தின் இரு கண்கள். எட்டுத் தொகையில் ஒன்று புறநானூறு.தமிழர்களின் அறத்தையும் வீரத்தையும் பேசும் பேரிலக்கியம்.அதிலிருந்து சிலவற்றை தற்காலத் தமிழ்ச் சமூதாயத்திற்கு நினைவும்படுத்துவது. அவசியம், அவசரமும் கூட.

புறநாறூற்றில் பத்தாவது பாடல், பாடியவர் புலவர் ஊன் பொதி பசுங்குடையார்.பாடப்பட்டவர் சோழ மன்னன் நெய்வதலங்கானல் இளஞ்சேட் சென்னி. இந்தப்பாடல் மன்னனுக்காக கூறப்பட்ட அறவுரை அல்ல ,அறிவுரை.சங்கப் புலவர்கள் மன்னனை வாழ்த்தி வணங்கி இடித்துரைப்பதில் வல்லவர்கள்,இந்தப் புலவர் சோழ மன்னைப் பார்த்து நெய்தலங்கானல் நெடியோ  என்று வாழ்த்தி, இவ்வாறு உரைக்கின்றான். 
 
வழிபடுவோரை வல்லறி தீயே!
பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே ;
நீ மெய் கண்ட தீதைகாணின்,
 ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி ;
வந்து, அடி பொருந்தி,முந்தை நிற்பின் 
தண்டமும்தணிதி ,நீபண்டையிற் பெரிதே
 
இதன்பொருள்:
 
நீண்டு நெடுங்காலம் வாழும் அரசனே, உன்னைப் போற்றி புகழ்ந்து வழிபடும் நபர்களைஆராய்ந்து அறிந்துகொள். அதாவது முகஸ்துதி செய்பவர்களிடம் ஜாக்கிரதையாக இரு! அடுத்தவர்களைப் பற்றி புறம் கூறுபவர்களின் பேச்சைக்கேட்காதே! ஒருவனின் தீமையை ஆராய்ந்து  தண்டனையை வழங்கு! தப்பு செய்தவர்கள் காலடியில் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டால் தன்டனையைக் குறைத்துகொடு! 
 
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடப்பட்ட பாடலாக இருந்தாலும் இன்றைக்கும் இது பொருந்தும்! சங்ககால இலக்கியங்கள் சாகாவரம் பெற்றவை.காலம் கடந்து நிற்பவை.வாழ்க தமிழரின் அறம்!